twitter


அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அந்த மாநாட்டில் அவர் பேசியதாக திடுக்கிடும் செய்தி வந்தது.

ஆணும் ஆணும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் சேர்ந்து கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த வக்கிர உறவிற்குப் பெயர்தான் ஓரினச் சேர்க்கை என்பதாகும். இதற்கு ஒரு தமிழ் மகன் ஆதரவா? எண்ணிப் பார்க்கவே இதயம் நடுங்கியது.

ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் குடித்தனம் நடத்தலாம். இது என்ன கொடுமை? அப்படியானால் குடும்ப உறவுகள், மரபுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வேண்டுமா?

ஓரினச் சேர்க்கையை தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்ததாகவோ ஆதரித்ததாகவோ எந்த இலக்கியத்திலும் எந்தத் தமிழ்க் கல்வெட்டிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லி ஆங்கிலத் தொலைக்காட்சியைத் தற்செயலாகத் திருப்பினோம். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல் தந்தனர்.

ஓரினச் சேர்க்கை என்ற அநாகரிகத்திற்கு ஆட்பட்டு விட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்மீது மத்திய அரசின் கருத்தை உயர்நீதிமன்றம் கேட்டது.

`ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை, `ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

விரும்பிய ஓர் ஆணும் இன்னொரு ஆணும் குடும்ப வாழ்க்கை நடத்தினால் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் உயர்நீதி மன்றத்தை நாடிய ஓரினச் சேர்க்கையாளரின் கோரிக்கை. ஆஹா! அற்புதம்! அது வேதங்கள் கொள்கை கோட்பாடு என்று அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று உள்துறை தாக்கல் செய்த மனு கூறுகிறது. நல்லவேளை அந்தத் துறைக்கு சீழ்பிடித்த சிந்தனைகள் உதயமாகவில்லை.

`தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரகசியமாக மறைமுகக் குடித்தனம் நடத்துகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விட்டால் பகிரங்கமாக வாழ்வார்கள். அப்படி வாழும் போது எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பில்லை. மறைமுக உறவுகள் அந்த நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்' என்பது மத்திய சுகாதாரத் துறையின் வாதம்.

ஓரினச் சேர்க்கை என்பது இந்திய கலாசாரச் சீரழிவின் உச்சகட்டம். அதனை அனுமதிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டிற்கு விதிக்கப்படும் மரணதண்டனை.
முன்னர் ரஷ்யா சென்றிருந்தோம். மாஸ்கோ வானொலி தமிழ் ஒலிபரப்பில் சகோதரர் மணிவர்மா பணி செய்து கொண்டிருந்தார். அவர் கார்வண்ண கரியமேனியன். அவரை சோவியத் சகோதரி காதலித்து மணம் புரிந்து கொண்டார். அவர் ஆப்பிள் நிற அழகி.

அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது, `எப்படி அம்மா இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?' என்று கேட்டோம். கலகலவெனச் சிரிப்பலைகள் எழுந்தன.

அந்தச் சகோதரி சொன்னார். `நான் தமிழ் கற்றவள். தமிழர் பண்பாடு தெரிந்தவள். அந்தப் பண்பாடு வேறு எங்கும் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் உயர்ந்த பண்பாடாகும். அந்தப் பண்பாட்டை மணந்திருக்கிறேன்!' என்றார் அந்தச் சுந்தரி.

நாம் எவ்வளவு பெரிய நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்பது அப்போதுதான் என் மூளையில் உறைத்தது. ஆனால் இங்கே அன்புமணிகள் அதிய ராகம் பாடுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புகைப்படத்தோடு ஒரு செய்தி வந்தது. வயது முதிர்ந்த ஜெர்மன் தம்பதியர் ராமேசுவரம் வந்தார்கள். ஆலயம் சென்றார்கள். தமிழர் பண்பாட்டின்படி இதுவரை வாழ்ந்திருக்கிறோம். மீண்டும் எங்களுக்குத் தமிழர் மண முறைப்படி திருமணம் நடத்துங்கள் என்று அவர்கள் கோரினர். மணவிழாவும் நடந்தது.

இந்தியாவில் எத்தனையோ தேசிய இனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ் மண்ணின் திருமண முறைதான் தலைசிறந்தது என்பது அந்த ஜெர்மன் தம்பதியர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

நமது குடும்ப உறவுகள் - மண முறைகள் இன்று நேற்று தோன்றியது அல்ல. சிந்துவெளி நாகரிகம் கண்ட எம் மூதாதையர் தந்த சீதனம்தான் உலகம் மெச்சும் நமது உறவுமுறைகள். அந்த உறவின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்தவை. இன்றுவரை அந்த நாகரிகத்தின் ஈரவரிகள் உலர்ந்து போகவில்லை.

அந்த மணமுறையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல் பெற்று பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. பலதார மணம் கடந்து, `ஒருத்திக்கு ஒருவன்' என்ற கோட்பாட்டை எட்டினோம்.

காலவெள்ளத்தில் நமது குடும்ப உறவுகள் கரைந்து போனதில்லை.
ஆனால் இன்றைக்கு அந்தப் பண்பாட்டிற்கே கல்லறை எழுப்பத் துடிக்கிறார்கள். மேலைநாடுகளின் வக்கிர மனிதர்கள் வளர்க்கும் விபரீத உறவுகளுக்கு இங்கே அங்கீகாரம் தேடுகிறார்கள். வேரில் வெந்நீர் ஊற்றப் பார்க்கிறார்கள்.

லட்சம் பேருக்கு அதிகபட்சம் ஐம்பது பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படித்தான் வாழ்வோம். எங்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தைத் திருத்துங்கள் என்று மேலைநாடுகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் அவர்கள் கட்டிப் புரள்கிறார்கள். அவர்களுக்காக வாதாட அடகுபோன சிலரும் இருக்கிறார்கள்.
மிருகங்களில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. பறவைகளில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. ஆனால் குப்பைமேட்டு மனிதர்கள் சிலர் அந்தக் கொடுமையான வாழ்க்கை நடத்துவோம் என்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கிருந்து எப்படிப் பணம் கொட்டுகிறது என்றே தெரியவில்லை. செல்வந்தர்களில் அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மேலைநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்மாசனங்களையே வளைக்க முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள்.

ஆனால் இந்தப் பழம் பெரும் பூமி அத்தகைய அநாகரிகச் சட்டங்களை அண்ட விட்டதில்லை. நமது சட்டம் என்ன சொல்கிறது? ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 397வது சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது.

ஆனால் அந்தத் தண்டனையை ரத்து செய்து அந்த அநாகரிக உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். அண்மையில் சென்னை வந்த அவர், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பிரதமரைச் சந்திப்பேன். கோரிக்கை மனுக் கொடுப்பேன் என்றார்.
ஓரினச் சேர்க்கையை அனுமதித்த பின்னரும் எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் பரவாது என்பதற்கு அவர் என்ன உத்தரவாதம் தருகிறார்?

பால்வினை நோய் பரவுவதற்கு ஓரினச் சேர்க்கை ஒரு காரணம் என்றால், அதனைத் தடுப்பதற்குத்தானே வழிவகை காண வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தக் கலாசாரச் சீரழிவை அங்கீகரித்தால் போதும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஒரு பக்கம் புகைபிடித்தால் 500 ரூபாய் வரை அபராதம் என்கிறார். இன்னொரு பக்கம் மானக்கேடான ஓரினச் சேர்க்கைக்கு விதிக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இப்படி வேடிக்கை மனிதர்கள் விநோதத் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

சென்ற வாரம் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜை நிருபர்கள் சந்தித்தனர். `ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா' என்று கேட்டனர். `கர்மம் கர்மம்' என்றார் அவர். `பின்னர் ஏன் அதற்காக வாதாடுகிறார்கள்' என்று கேட்டனர்.

`எனக்கு வயதாகிப் போய் விட்டது. அவர்களையே கேளுங்கள்' என்றார் பரத்வாஜ்.

ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள். அதிசய ராகம் பாடுகிறார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
Reade more >>
Friday, November 21, 2008 | 1 comments | Labels:

சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு தமிழக தட்பவெப்ப நிலையில் நிறைய மாற்றங்கள். கோடையில் அதீத அனல், குளிர்காலத்தில் மழையும் குளிரும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலை. இதன் தாக்கம் கடலிலும் எதிரொலிப்பதால் குமரி முதல் சென்னை வரை வரை பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி, ஆர்ப்பரிக்கின்றன. கடலை நம்பியே வாழும் மீனவர்கள், தமிழக மக்களின் மனதில் பயம்; பீதி. என்னவாயிற்று இயற்கைக்கு?``


காற்று மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு மூல காரணம். சுருக்கமாக `குளோபல் வார்மிங்'. இதனால் கடல் மட்டம் உயர்ந்து நீர் நிலத்திற்குள் வரும். குறிப்பா சென்னை நகரத்திற்கு இந்த ஆபத்து அதிகம்!'' என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல புவியியல் நிபுணரும், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான டாக்டர் ராமச்சந்திரன்.


``உலகின் தென்துருவமான அண்டார்ட்டிகா முழுவதும் பனிமலைகளின் ஆதிக்கம். மனிதர்கள் உயிர்வாழ முடியாத அளவு ரத்தத்தை உறைய வைக்கும் வெப்ப நிலை. ஆனால் கடந்த பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிற பனிக்கட்டிகள் மெல்லமெல்ல உருக ஆரம்பிச்சிருக்கு. இதற்குக் காரணம் அங்கே 0.5 முதல் 1% வரை வெப்பநிலை உயர்ந்திருப்பதுதான். இதனால் கடல் நீர்மட்டம் 28 செ.மீ. உயரம் என்கிற அசாதாரண நிலையைத் தொட்டிருக்கு.


1980-க்குப் பிறகு ஆராய்ச்சிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கு'' என்று சொல்லும் ராமச்சந்திரன், ``இப்போதிருக்கும் உலக வெப்ப நிலையில் 2% உயர்ந்தாலே போதும், ஆபத்து நிச்சயம்'' என்கிறார்.


ஏற்ற இறக்கமான தட்பவெப்ப நிலைக்கு மற்றொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது `எல் நினோ'. தென்அமெரிக்க நாடான `பெரு'வில் பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தில் உண்டாகும் மாற்றம்தான் `எல் நினோ'. உலகின் மேற்குப் பகுதியில் உயரமாக இருக்கும் இந்த நீரோட்டம், கிழக்குப் பக்கம் சற்று தாழ்வாக இருக்கும். அதன் காரணமாக கடல்நீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டத்தை உயர்த்துகிறது.சரி, பனிப்பாறைகள் உருகுவது இயல்புதானே. இயற்கை அதனை சமன் செய்து கொள்ளாதா?


``அப்படிச் சொல்ல முடியாது. உதாரணமா லார்சன் - ஏ. இவை அண்டார்ட்டிகாவில் இருக்கும் மிகப்பெரிய பனிப்பாறைகள். நான்காயிரம் ஆண்டுகள் பழமையானவை. பொதுவா மிக அதிக வெப்பம் தாக்கினாலன்றி பனிப்பாறைகள் எளிதில் உருகாது. ஆனால் தற்போது லார்சன்-ஏ பனிப்பாறைகள் உருகிக்கிட்டிருக்கு. இதனால் நீரின் அடர்த்தி, வெப்ப நிலை, காற்றின் வேகம்... உள்ளிட்டவற்றில் நிறைய மாற்றங்கள். இயற்கையின் போக்கையே இந்த மாற்றங்கள் புரட்டிப் போட்டுவிடும்'' என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார் ராமச்சந்திரன்.


`பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்தாலும், தமிழகத்திற்கு ஆபத்து உண்டா?' - என்ன சொல்கிறார் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராய்டு?


``இப்போ நாம மக்கிப் போன பொருட்களிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல், அனல் மின்சாரத்தைத்தான் எரிபொருட்களா பயன்படுத்துறோம். இதனால் காற்று மண்டலம் முழுவதும் கார்பன்_டை_ஆக்ஸைடின் அளவு எகிறுது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடல் பகுதியின் பரப்பளவு மிக நீ... ளம்.


குறிப்பா, கடலின் ஆழ்பகுதிக்கும் தரைப்பகுதிக்கும் இடையே உள்ள `மீன் ஸீ லெவல்' (எம்.எஸ்.எல்.) சென்னையில் மிகவும் குறைவு. உதாரணமா, ஊட்டியில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு மூவாயிரம் அடி. ஆனால் சென்னையில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு என்ன தெரியுமா? ஒரு அடிக்கும் குறைவு. சென்னையில் ராயபுரம் முதல் திருவான்மியூர் வரை இதுதான் நிலை. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டம் உயரும் போது சென்னைக்கு பாதிப்பு நிச்சயம்!' எனச் சொல்லும் ராய்டு, மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவதும், கடல்வாழ் தாவரங்களை வளர்ப்பதும் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று `பாசிட்டிவ்'வாகப் பதில் சொல்கிறார்..


``லேட்டஸ்ட்டாக இமய மலையை ஆய்வு செய்து வரும் டெல்லியைச் சேர்ந்த புவி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று `குளோபல் வார்மிங்' காரணமாக இமயமலையில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், இன்னும் 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் முழுவதும் உருகி வெறும் கற்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடலில் மூழ்கும் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
Reade more >>
Sunday, November 9, 2008 | 3 comments | Labels:

சில மேனிலைப்பள்ளிகளில் 100-க்கு 88 மாணவர்கள் ஃபெயில். 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றவை ஒரு சில பள்ளிகள் தான். இப்படி கல்வியில் தாழ்ந்து தலைகுனிந்து நிற்கும் கடலூர் மாவட்டத்தில் மாணவர்களில் தரத்தை உயர்த்துவது எப்படி? மாவட்டத்திலுள்ள 42 மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்துக்கூட்டம் போட்டார் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ!
"நமது கவனம் சிதையக்கூடாது. ஆகவே முதலில் நமது செல்ஃபோன்களை ஆஃப் செய்து விடுவோம்". என்ற அறிவிப்போடு பேச்சைத் தொடங்கினார்.இடையில் ஒரு செல்ஃபோன் இடைவிடாமல் அலற, சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார் கலெக்டர்.... அலறியது சேத்தியாதோப்பு பெண்கள் மேன்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சந்திராவின் செல்போன் என்பதைக்கண்டறிந்தார்.
"ஏம்மா ஆஃப் பண்ணலை?" கொஞ்சம் கோபமாகக் கேட்டார். ஆசிரியை கண்கள் கலங்கி விட்டன. "எனக்கு ஆஃப் பண்ணத்தெரியலை சார்!" உண்மையைச் சொன்னார் ஆசிரியை.
"ஒரு தலைமை ஆசிரியை இது கூடத் தெரியாமல் இருக்கலாமா?" தலையில் அடித்துக் கொண்ட கலெக்டர், மற்ற தலைமையாசிரியர்களைப் பார்த்து "நான் பேசியதை எல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டீர்களா?" என்றார். "இல்லீங்க சார்!" எல்லாரும் தலையாட்டினார்கள். "சரி போகட்டும்... நான் என்ன சொன்னேன்னு சொல்லுங்க பார்ப்போம்", கீரப்பாளையம், கருப்பேரி பள்ளித் தலைமையாசிரியர்களைப் பார்த்துக்கேட்டார்.
கடைசி பெஞ்ச் மாணவர்களைப் போல திருதிருவென விழித்தார்கள் அந்த ஆசிரியர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கடலூர் மாவட்டத்தின் கல்வித்தரத்தை எப்படி மேம்படுத்துவது?
நன்றி: நக்கீரன் (05-07-2008)
Reade more >>
Wednesday, July 9, 2008 | 1 comments | Labels:
பொறுப்பற்ற பெட்ரோல் பங்க்கள். (சுடச்சுட சுட்டது.... நன்றி: சேவியர், http://srippu.wordpress.com/)

நேற்று இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு ஒருவழியாக இரவு பத்து மணிக்கு காரில் கிளம்பினேன். கொஞ்ச நேரத்திலேயே காரின் உள்ளே மஞ்சள் விளக்கு பல்லிளித்தது. அடக்கடவுளே பெட்ரோல் தீர்ந்து விட்டது.
பரவாயில்லை. குரோம்பேட்டையிலிருந்து வேளச்சேரி செல்வதற்குள் குறைந்தபட்சம் பத்து பெட்ரோல் பங்க் கள் இருக்கின்றன எங்காவது ஒரு இடத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே காரை ஓட்டினேன்.


குரோம்பேட்டை பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க் வாசலில் ஒரு பெரிய ட்ரம் கயிறுகளுடன் கட்டப்பட்டிருந்தது. “ஸ்டாக் தீந்து போச்சு சார்” பதில் வந்தது.
அடுத்த இடத்தில் விளக்கையும் அணைத்து விட்டிருந்தார்கள்.
இதே நிலை தான் வேளச்சேரி வரை. எல்லா பெட்ரோல் பங்க்களும் இரவு பத்து மணிக்கே மூடப்பட்டு, வழி அடைக்கப்பட்டு இருட்டுக்குள் கிடந்தன.
காரணம் நள்ளிரவுக்கு மேல் விலையை ஐந்து ரூபாய் ஏற்றிக் கொள்ளலாம் எனும் அறிவிப்பு.


நண்பனுக்கு தொலைபேசினேன், மவுண்ட் ரோடு பக்கம் ஏதாவது பெட்ரோல் பங்க் திறந்திருந்ததா என அறிந்து கொள்ள. “எல்லாம் சாயங்காலமே மூட ஆரம்பிச்சுட்டாங்க” என்றான் அவன்.

எரிச்சலும், கோபமும், வழியில் வண்டி நின்று விடக் கூடாதே எனும் பயமுமாக வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் – என்று ஏன் பெட்ரோல் விலை உயர்வு வருகிறது என்பது புரியவே இல்லை. அதனால் ஏற்படும் அவஸ்தைகளுக்கு அளவே இல்லை.

மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாகனம் நின்றிருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

11.59 வரை ஸ்டாக் இல்லாத பெட்ரோல் பங்க் கள் 12.00 மணிக்கு எப்படி சட்டென திறந்து கொள்கின்றன ? ஸ்டாக் எங்கிருந்து வருகிறது என்பதெல்லாம் பூச்சாண்டிக் கதைகள் என்பதை மழலைகளே விளக்கும்.
விலையை உயர்த்தி சட்டமியற்றும் அரசு, நள்ளிரவு நேரம் வரை கடைகளை மூடக்கூடாது என்று சட்டம் இயற்ற முடியாதா ? அல்லது தேவையில்லாமல் இரண்டு மூன்று மணி நேரம் ஒட்டு மொத்தக் கடைகளையும் அடைத்து சமூகத் தேவையை மதிக்காத இந்த பங்க்களை என்ன செய்வது ?

இந்த சில மணி நேர லாபத்துக்கே இப்படிச் செய்பவர்களை நினைக்கும்போது ஒன்று சட்டென மனதில் தோன்றியது. தனியார் மயம் எத்தனை கொடுமையானது ? வெறும் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இவர்களிடம் ஒரு உதாரணத்துக்காக போக்குவரத்தை ஒப்படைப்பதாய் வைத்துக் கொண்டால், நெரிசல் நேரங்களில் மட்டுமே பஸ் ஓடும். காலையில், இரவில், மதிய நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்தால் பஸ் ஓடாது இல்லையா ?

செய்தித் தாளில் திருத்தப்பட்ட பெட்ரோல் விலை என்று ஒரு விலை போட்டிருந்தார்கள். காலையில் பெட்ரோல் நிரப்பியபோது வேறோர் விலையில் இருந்தது.

அதிலும் ஸ்பீட், பவர், சக்திமான் என்றெல்லாம் பெயரிட்டழைக்கும் பெட்ரோல் லிட்டர் 60 ரூபாயையும் தாண்டி !!! இதுக்கெல்லாம் என்ன நிர்ணயம் என்பது விளங்கவில்லை. 52 ரூபாய்க்கு விற்ற பவர் பெட்ரோல் 60 ரூபாய் எனில் 8 ரூபாய் விலையேற்றம். அது அனுமதிக்கப்பட்டது தானா ? அதுக்கு 5 ரூபாய் விலையேற்றம் பொருந்தாதா ? என்பதெல்லாம் ஒரு சாமான்யனின் விடை தெரியாத கேள்விகள்.

Reade more >>
Thursday, June 5, 2008 | 1 comments |
தினமணிக் கதிரிலிருந்து தகவலுக்காக....
ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது ஒரு மனிதனுக்கு புதியதோர் உலகத்தைத் திறந்துவிடுவதைப் போன்றது. அதிலும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதினால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றால் புதிய வாழ்க்கைக்கான நுழைவாயிலாகவே அந்த மொழி மாறிவிடுகிறது. உலகமெங்கும் தனது நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது ஜப்பான். ஜப்பான் நிறுவனங்களில் வேலை செய்ய ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது அவசியம். ஜப்பானிய மொழியைக் கற்றுத் தரும் நிறுவனம் ஒன்று சென்னை அண்ணாநகரில் எஸ் அன்ட் என் ஹயகாவா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.ஹயகாவா. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஜெ.ஹயகாவா
ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?
ஜப்பான் நாட்டின் ஸôஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். ஸôஃப்ட்வேர் மட்டுமில்லை, ஆட்டோமொபைல், எலக்ட்ரிகல், பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு நிறையப் பேர் தேவைப்படுகின்றனர். இதற்குக் காரணம், ஜப்பான் மக்களுக்கு ஜப்பானிய மொழி ஒன்றுமட்டுமே தெரியும். ஆனால் ஜப்பான் நாட்டு தொழில்களும் நிறுவனங்களும் உலகம் முழுவதும் இருக்கின்றன. அவை சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரிந்தவர்கள் தேவை. இந்தியாவில் மாணவர்களுக்கு ஏற்கனவே ஆங்கிலம் தெரியும். எனவே அவர்களுக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் ஜப்பானிய நிறுவனங்களில் எளிதில் வேலை கிடைத்துவிடும் சூழல் உள்ளது.

கம்ப்யூட்டர், பொறியியல் படிப்பு தவிர, பிற படிப்பு படித்த மாணவர்களுக்கும் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு உள்ளது. உதாரணமாக பிஏ ஆங்கிலம் படித்த ஒருவர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் ஃபிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட் பணிகளில் ஈடுபட முடியும். இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வம் காட்டிவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஜப்பானிய நிறுவனங்கள் 25 க்கும் மேல் உள்ளன. இன்னும் நிறையத் தொழிலகங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்திய மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

ஜப்பானிய மொழியை எந்த எந்த இடங்களில் கற்றுத் தருகிறீர்கள்?
நாங்கள் முதன் முதலில் 2005 - இல் மதுரையில் உள்ள டிவிஎஸ் பள்ளியில்தான் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் படிக்கும் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். அதன்பின் சென்னை ஆவடியிலுள்ள வேல்டெக் என்ஜினியரிங் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பொறியியல் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். ஹெச்சிஎல் போன்ற நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் ஜப்பானிய மொழியைக் கற்றுத் தருகிறோம்.

தனிநபர்களுக்குக் கற்றுத் தருவதில்லையா?
கல்வி நிறுவனங்கள் மூலமாகவும், தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் கற்றுத் தருவதைப் போலவே, தனிநபர் ஒருவர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்தால் அவர்களுக்கும் கற்றுத் தருகிறோம். இதற்காக எங்களுடைய சென்னை அண்ணா நகர் மையத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

வாரக் கடைசி நாட்களான சனி, ஞாயிறுகளில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கும் என்பதால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் இந்த வகுப்புகளை நடத்துகிறோம்.
ஜப்பானிய மொழிக்கான தேர்வுகளை நடத்துகிறீர்களா?
நாங்கள் நேரடியாகத் தேர்வு எதையும் நடத்துவதில்லை. ஜப்பானிய மொழியில் திறனறியும் தேர்வு ( JLPT) ஜப்பான் அரசால் நடத்தப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்துகிறது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அவர்கள் ஒரு ஸர்டிபிகேட் தருவார்கள். அது இருந்தால்தான் ஜப்பானிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் தேர்வு நான்கு லெவல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நான்காவது லெவல் என்பது ஆரம்பநிலை. மூன்றாவது, இரண்டாவது, முதலாவது நிலைகள் படிப்படியாக ஆழமாக ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதைக் குறிக்கும். முதல் நிலை பயின்ற ஒருவர் ஜப்பானிய மொழியில் இருந்து பிறமொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஜப்பானிய மொழிக்கும் மொழிபெயர்க்கும் திறனைப் பெற்றுவிடுவார். மூன்றாவது நிலை வரை படித்தவரால் ஜப்பானிய மொழியில் பேசவும் எழுதவும் முடியும்.
பொதுவாக ஸôஃப்ட்வேர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை செய்ய நான்காவது, மூன்றாவது நிலை வரை படித்தால் மட்டும் போதும்.
எந்த நிறுவனத்திற்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் போதும். எவ்வளவு நாளில் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்?
நான்காவது நிலை, மூன்றாவது நிலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் 150 மணி நேரங்கள் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இரண்டாவது மற்றும் முதலாவது நிலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் 300 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
நேரடி வகுப்புகள் தவிர வேறு எந்த முறையில் கற்றுத் தருகிறீர்கள்?
ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள தொலைதூரக் கல்வி முறையையும் பயன்படுத்துகிறோம். இதற்கான தொடர்பு வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான்கு மணி நேரம் நடைபெறும். இணைய தளம் மூலமாகவும் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதற்கு புத்தகங்கள் தருகிறோம். கூடவே சிடியும் தருகிறோம். அந்த சிடியில் ஜப்பானிய எழுத்துகளை எழுதுவது எப்படி என்பதும், அவற்றை எப்படி உச்சரிப்பதும் என்பதும் கற்றுத் தரப்படும்.

எங்களுடைய ஆசிரியர்கள் ஜப்பானியர்கள். அவர்கள் ஜப்பானின் இயற்கைத்தன்மை மாறாமல் ஜப்பான் நாட்டுப் பாணியிலேயே பேசுவதற்குக் கற்றுத் தருகிறார்கள். இதனால் எங்களிடம் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டவர்கள் ஜப்பானிய நிறுவனங்களில் வேலை செய்வது மிக எளிதாகிவிடுகிறது.

எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள்?
நான்காவது நிலை, மூன்றாவது நிலை இரண்டும் பயில ரூ.17 ஆயிரம் ஆகிறது. அனைத்துநிலைகளையும் கற்றுக் கொள்ள ரூ.67 ஆயிரம் ஆகிறது.
ஜப்பானுக்குச் சென்று நேரடி பயிற்சி பெற முடியுமா?
ஜப்பானிய மொழியை எங்களின் மூலமாகக் கற்றுத் தரும் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் ஜப்பானில் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. வேலைவாய்ப்புக்கு அவை உதவுகின்றன.

ஜப்பானிய பல்கலைக் கழகங்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதனால் இங்குள்ள மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அங்கு சென்று நேரடிப் பயிற்சி பெற முடியும்.

ஜப்பான் மொழியின் உச்சரிப்பு நமது தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சிரமம் அல்லவா?
ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்வது ஆங்கிலம் கற்றுக் கொள்வதைவிட மிக எளிது. காரணம் தமிழில் உள்ள வாக்கிய அமைப்புகளைப் போலவே ஜப்பானிய மொழியின் வாக்கிய அமைப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ளதைப் போலத் தலை கீழாக இல்லை.
நன்றி: தினமணிக்கதிர்
Reade more >>
Thursday, May 29, 2008 | 1 comments | Labels: ,
பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து.... தகவலுக்காக சுட்டது.

குறிப்பிட்ட சில பண முதலைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சிப்காட்தான் நம்மை போன்ற சமான்ய மக்களுக்கு சாபக்கேடாக வந்து வாய்த்துள்ளது. சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஒரு இத்தகவலை வெளியிட்டிருக்கிறது நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு. இது குறித்து MYPNO வலைப்பூவில் ஏற்னகவே 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன? தகவல் வெளியிட்டுள்ளோம்.

ஒரு சராசரி மனிதனைவிட 2000 மடங்கு கேன்சர் ரிஸ்க் இருக்கிறதாம் இந்த பகுதி மக்களுக்கு. அது மட்டுமின்றி, சிப்காட் கழிவுகள் கடலுக்கு செல்வதால் இப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உண்ணுபவருக்கும் இந்த ரிஸ்க் இருக்கிறதாம், அவர் எந்த நாட்டிலிருந்தாலும் சரி, இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில்.....!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எத்தனை ஆய்வறிக்கைகள், புகார்கள் என்று குவிந்தவண்ணமிருந்தும் அவற்றையெல்லாம் பெயரளவிற்கு பரிசீலிக்கிறோம் என்று சொல்கிறதேயொழிய இதுவரை எந்த நடவடிக்கையும் முறைப்படி எடுக்கவில்லை.

தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இதர சுற்றுப்புறசூழல்/மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் என்று அடிக்கடி இந்த ஏரியாவில் உள்ள காற்று, மண், நீர் போன்றவற்றை ஆரயாச்சி செய்து கேன்சர் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் (Toxic Chemicals) மிகுதியாக உள்ளது என்று ஆய்வறிக்கைகளை சமர்பித்தாலும்... இதுவரை நோ ஆக்ஷ்ன்தான்.

இதற்கிடையில் பொதுமக்களை ஏமாற்றுவதற்கும், வாக்குகளை பெறுவதற்கும் அரசியல் கட்சிகள் அடிக்கடி போராட்டங்கள் என்று பெயரளவிற்கு அறிவித்து பிறகு பேரங்களின் ஆதாயங்களைக் பெற்றவுடன் அட்ரஸே தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள். போரட்டங்களை அறிவிப்பதே இது போன்ற பேரங்களுக்கத்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?பொதுமக்கள் நேரிடியாக களத்தில் இறங்கி போராடினால், நாங்கள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்களே தவிர முறையான நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. சிப்காட் தொழிற்பேட்டையால் அரசியல் கட்சிகள் ஆதாயமடைந்து வரும் நிலையில் மக்களின் பிரச்சினைக்கு அவர்கள் எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பார்கள்?

ஆறுதலுக்காக ஒரு லிங்க் தருகிறேன். இதை க்ளிக் செய்து தமிழக முதல்வருக்கு நீங்கள் பெட்டிஷன் அனுப்பலாம். இது தமிழ்நாடு அரசின் செயலகத்தில் உள்ள சி.எம். செல்லிற்கு ஃபாக்ஸ் செய்தியாகப் (Online Fax Message) போய் சேரும்.

SEND AN ONLINE FAX URGING TAMIL NADU GOVERNMENT TO STOP POLLUTING CUDDALORE
http://petitions.aidindia.org/cuddalore/

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளை ஏற்று கடந்த மாதம் கூட கனிமொழி கடலூரில் உள்ள சர்ச்சைக்குள்ளான அந்த தொழிற்சாலைகளை(Shasun Chemicals and Tagros Chemical Ltd) பார்வையிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பார்வையில் விதிகளுக்கு புறம்பான இவ்விரு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியரை இப்பகுதி மக்களிடம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் கலந்துகொண்டனர். தி.மு.க மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளை கவனிக்க கடலூர் வந்தபோது இப்படி ஒரு சோதனையை நடத்திச்சென்றுள்ளார் கனிமொழி. ஆனாலும் என்ன நடவடிக்கைகள், எப்போது எடுக்கப்படும் என்று வியலுக்காக காத்திருப்புகள் தொடரத்தானே செய்கிறது.

தேசிய அளவில் எத்தனையோ கட்சிகளும், அமைப்புகளும் பெப்ஸி-கோக் நச்சுப் பொருளுக்காக போரடியதை அவர்கள் உட்பட நாமும் வசதியாக மறந்து நிற்கிறோமே!

இவ்வளவு தெரிந்தும் கூட இன்னமும் பரங்கிப்பேட்டை மக்கள் தன்னுடைய வாரிசுகளுக்கு சிறந்த கல்வி(?) புகட்டச் செல்கிறோம் என்கிற பெயரில் கடலூருக்கு தனிக்குடித்தனம் புகுவிழாக்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கேன்சர் ஏரியா... உள்ள வராதே! என்று ஒரு போர்டு வைக்கனும் என்று தோனுகிறது எனக்கு... கடலூர் எல்லையில்.

வேறு ஏதாவது மாற்று வழி தேவை இவற்றை தடுப்பதற்கு. அறிவுப்பூர்வமாக யோசித்து உங்களின் கருத்துகளை இங்கு பதிவுடுங்கள். அலசுவோம்.... ஆலோசனை செய்வோம்!..... தொடரும்....

குறிப்பு: இந்த தகவல்கள் எல்லாம் எனது கற்பனையல்ல. இது குறித்து முழு விபரம் அறிய கீழ்கண்ட லிங்கினை க்ளிக்கவும்.

http://mypno.blogspot.com/2008/04/25.html
http://www.alternet.org/healthwellness/85630/?page=entire
http://cuddaloreonline.blogspot.com/2008/05/toxic-chemicals-in-sipcot-cuddalore-and.html
http://www.sipcotcuddalore.com/pr_220308.html
http://www.sipcotcuddalore.com/News_Thaindian_230308.html
Reade more >>
Tuesday, May 27, 2008 | 1 comments | Labels:

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எதிரான விளையாட்டு பொருட்களின் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு அமெரிக்கன் கம்பெனி விளையாட்டு பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து பின்வாங்கியது. விற்பனை செய்யும் கடைகளிலும் பரிசோதனை செய்யப்பட்டது.


இதற்கிடையில் நோக்கியா கம்பெனியின் பாட்டரியான BL^5c வரிசை எண்ணுள்ள சில பாட்டரிகள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டதால் அதை பின்வாங்குவதாக நோக்கியா கம்பெனியின் அதிகாரிகள் அறிவித்தனர். இந்த வகை பாட்டரிகளை செல்போணில் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது அவை அதிகமாக சூடாகி ஆபத்தை உண்டாக்கும் என கண்டறியப்பட்டதாலேயே இது நிறுத்தப்படுகிறது.


தாம் உபயோகிக்கும் பேட்டரிகள் இந்த வகையில் உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய www.nokia.com/batteryreplacement/ent என்ற வெப்ஸைட்டுக்கு சென்று பாட்டரியின் வரிசை எண்ணை டைப் செய்து பரிசோதிக்கலாம். இந்த வகை பாட்டரிதான் என்பது ஊர்ஜிதமானால் பயன்படுத்துபவரின் பெயரையும் விலாசத்தையும் பதிவு செய்தால் கம்பெனிமூலம் இலவசமாக புதிய பாட்டரி அனுப்பிதரப்படுமென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Reade more >>
Saturday, May 24, 2008 | 1 comments | Labels:
முப்பது வயச தாண்ட முடியல! உடனே... கொலஸ்ட்ரால் இருக்கா? B.P. இருக்கா? சுகர் எவ்வளவு இருக்கு? என்று நம்மள கேள்விகளால் கொத்தி எடுத்துடுறாங்க நம்மை சுற்றியிருக்கும் Wellwishers! 30 வது பிறந்த நாள் என்றால் "லப்டப்... லப்டப்..." என்று துடித்துக் கொண்டிருந்த நம் இதயம் "பக்பக்... பக்பக்..." என்று பதற ஆரம்பித்துவிடுகிறது இவர்களின் பயமுறுத்தலினால். கேட்டா என்னென்னமோ காரணத்த சொல்றாங்க!

முன்னெல்லாம் 50 வயசுக்கு பிறகுதான் இதுமாதிரியெல்லாம் கணக்கு போட்டு ஹார்ட் பிராப்ளம் வரும் பார்த்து சாப்புடுங்க.... அத்த குறைங்க! இத்த குறைங்க!! என்று குரைப்புகள் அதிகமாகியிருக்கும். ஆனால் ஐம்பது என்பது நாற்பதாக குறைந்து இப்ப முப்பாதாக இன்னும் ஸ்மார்ட்டாகியுள்ளது. இப்படியே போனால்.... பிறக்கும் போதே ஒரு லிஸ்ட்ட கொடுத்து "நீ ஒழுங்கா இந்த உலகத்துல நடமாடனுமென்றால்.... இதத்தான் சாப்பிடனும்" என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கு.

அதுகூட இவர்கள் விமர்சிக்கும் கெமிக்கல் வகையாறாக்களை சார்ந்தே இருக்கும். இதற்கு நாம் பேசாமல் கற்காலத்துக்கே போய்விடலாம். அட விளயாட்டுக்கு சொல்லலீங்க! நிஜம்தான்!!

நம்முடைய முன்னோர்களான கற்கால மனிதர்களின் உணவான இலந்தை, உலர்ந்த பழங்கள், கொழுப்பற்ற இறைச்சி, மீன் ஆகியவற்றை சாப்பிட்டால் இதயம் தொடர்பான நோய்கள் குறையும். அட! நான் சொல்லலீங்க!! சுவீடனில் உள்ள கைரோலிம்ஸ்கா என்கிற அமைப்பு அன்மையில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, 20 பேருக்கு கற்கால மனிதர்களின் உணவை 3 வாரம் வழங்கப்பட்டது. பழங்கள், காய்கறிகள், உப்பில்லாத மீன், எலுமிச்சை சாறு, சர்க்கரையில்லாத காபி-டீ போன்றவை 3 வாரங்களக்கு கொடுக்கப்பட்டது. இத்துடன் தினமும் உருளை கிழங்கு 2 (மடடும்) அனுமதிக்கப்பட்டு, பால் பொருட்கள், உப்பு, வேர்கடலை, ஆல்கஹால், சர்க்கரை, பழரசங்கள் போன்றவற்றை உண்ண தடை செய்து ஆய்வு செய்தது. அதன்படி இவர்களின் எடை 25 கிலோ குறைந்திருந்தது. மேலும் உயர் ரத்த அழுத்தம் சராசரியாக 5 சதவீதம் குறைந்தும், ரத்தத்தில் சோர்வை உண்டாக்கும் ரசாயணங்கள் 72 சதவீதம் குறைந்தும் காணப்பட்டது.

ஹலோ! எங்க கௌம்புறீங்க? எலந்த பழம் வாங்கவா?
Reade more >>
Monday, May 19, 2008 | 0 comments | Labels:

நம் இந்தியத் திருநாட்டில்தான் பில்கேட்ஸிடம் போட்டி போடும் உலகப் பணக்காரர்களும் வயிற்றுப்பசிக்காக பிச்சை கேட்கும் இந்திய குடிமகன்களும். வேற்றுமையில் ஒற்றுமை இருக்கவேண்டியதுதான். அதற்காக இப்படியா வேற்றுமை மட்டுமே தலைநிமிர்க்க வேண்டும்?

இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஊழல்களால் 80 சதவீத்தினருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என்று, ஐ.நா.வின் பொருளாதார, சமூக கலாச்சார உரிமை கமிட்டியிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையை பொருளாதார, சமூக, கலாச்சார உரிமை தொடர்பான மக்கள் கருத்துக் குழு தாக்கல் செய்துள்ளது (நன்றி: தினமலர்).

என்னய்யா இப்படி ஒரு குண்ட போடுறாங்க? என்று மல்லாக்கப் படுத்தும் குப்புறப்படுத்தும் யோசித்துப் பார்த்தால் என் தலைதான் சுத்துததே தவிர ஒரு மண்ணும் பிடிபடமாட்டேங்குது. வலைப்பூவில் ஏதாவது சொல்லனுமே என்று கொஞ்சம் சுதாகரித்து எழுந்து இதுபற்றி வலைவிரித்தால்... அடேங்கப்பாதான்!
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350 - 400 மில்லியன் மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35சதவீதம் இந்தியர்கள் 1 அமெரிக்க டாலர் வருமானத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40 சதவீத மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது - என்கிறது ஒரு ஆய்வு (நன்றி: விக்கிப்பீடியா).

நம் நாட்டில் ஊழல் பெருகி வருவதால் ஐந்தில் நான்கு பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லையாம். சரியான நேரத்தில் பொருட்கள் பட்டுவடா செய்யப்படாமல் இருப்பது, பொருட்களை திருடுவது, பெரும் ஊழல்கள் போன்றவற்றால் பொது வினியோக முறை அலங்கோல நிலையில் உள்ளது என்றும் மேற்கண்ட இந்த குழு கூறுகிறது.

பாருங்கய்யா! இந்த அவல நிலையில் தான் நகரமெங்கும் ஐ.டி. நிறுவனங்கள் பெருகி வருகிறது. ஆனால் என்னத்த சொல்ல? ஐ.டி. நிறுவனங்கள் பெருகிவிட்டாலும் அய்யா! அம்மா! பிச்ச போடுங்கய்யா என்கிற கூப்பாடுகள் தொலையவில்லையே?
இந்த லட்சணத்தில் நம்நாட்டின் பொருளாதாரக் கொள்கையெல்லாம் எடுத்து பார்த்தோம் என்றால் ஒண்ணுமே விளங்கமாட்டேங்குது. அந்த லெவலுக்கு குழப்பி வைத்திருக்கிறார் நம்முடைய நிதிஅமைச்சர். விலைவாசி ஏற்றத்துக்கு எந்த சரியான தீர்வை பெறாமல் திணருகிறது மைய்ய அரசு. யாருக்குத் திண்டாட்டம்? வயிற்றுப் பசிக்கு கையேந்தும் சகோதர குடிமகன்களுக்கும் அடுத்த வேளை உணவிற்காக உழைக்கும் அன்றாடகாட்சிகளுக்கும் முக்கியமாக எந்த பிரச்சினைகளுக்கும் பங்கு எடுக்கவேண்டிய நடுத்தரக் குடும்பங்களுக்கும்தான் (அட! ஒட்டுமொத்த இந்தியாவும் அடங்கிவிடும் போல..)

ஆனால் கொஞ்ம் உற்று கவனித்தால் உலகப் பணக்காரர்களாக துடிக்கும் அம்பானிக்களும் டாட்டாக்களும் ஒருபுறமிருக்க, நம்ம மதிப்புற்குரிய சினிமா ஹீரோக்களும், கிரிக்கெட் வீரர்(?)களும் இவ்வளவு கோடிக்களை வைத்து அப்படி என்னதான் செய்றாங்க என்று தெரியவில்லை. (ஹலோ... ஹலோ... அரசியல்வாதிகளையெல்லாம் விட்டுட்டீயமா? என்று நீங்க புலம்புவது என் காதில் கேட்கிறது. இருந்தாலும் என்னத்த சொல்ல அவர்களைப் பத்தி? அப்புறம் பத்தி? வேணாமுங்க இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ் தான்).
என்னங்க நான்பாட்டுக்கு சொல்லிக்கிட்டு போனால்...... அப்புறம் உங்க கருத்தெல்லாம்? அதுதானே முக்கியம்! வாங்க வாங்க உங்க கருத்த பதிவிடுங்க முதலில்... அதுக்கப்புறம் விவாதிப்போம். சரியா?
Reade more >>
Saturday, May 17, 2008 | 2 comments | Labels:
"நமது முக்கியமான பிரச்சனை நமது அடையாளத்தை நாம் உணராததில் துவங்குகிறது. இத்தனை ஆண்டு கால இருப்பில் பரங்கிப்பேட்டைக்கு என்று கூட தனி வரலாறு தொகுக்கப்படவில்லை. 1000 ஆண்டு ஆண்ட பரம்பரையான நமது அடையாளத்தை நம்மை வென்று ஆளவந்த வெள்ளயன் தொகுத்தான். அந்த திரிபுகளத்தான் இன்றும் அனைவரும் படிக்கிறோம். இந்த அடையாள தொலைத்தலின் காரணம்கூட கல்வியின்மைதான்...." இப்படியான போக்குடன் துவங்கி, மிக ஆழமான சிந்தனைகள தூண்டி வந்திருந்த மாணவமணிகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு தனி சிந்தனை பரிமாணத்தை பரிசளித்தது சி.எம்.என். சலீம் அவர்களின் உரை.

நிச்சயமாக இந்த கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் பரங்கிப்பேட்டைக்கு புதிது.பிற சமுதாயங்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தினால் அந்த சமுதாயம் கண்ட பலன்கள சி.எம்.என். சலீம் அவர்கள் விரிவாக அலசினார். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்த ராஜேந்திர சச்சாரின் கமிட்டியின் அறிக்கையில் படம்பிடித்துக்காட்டப் பட்ட முஸ்லிம்களின் அவல வாழ்நிலையை பிற சமுதாய முன்னேற்றத்துடன் ஒப்பு நோக்கி பேசினார்.


கல்வியின் முக்கியத்துவம் பற்றி மிகவும் அழுத்தமான பதிவுகள வைத்த அவர், தொடர்ந்து கல்வி வழிகாட்டுதல் தொடர்பான விஷயங்கள கோர்வையாக விளக்கினார்.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. போன்ற சாமானியர்கள் நெருங்க தயங்கும் கல்வியில் நுழைவது எப்படி என்றும்,மருத்துவம், பொறியியல், மேலாண்மை மற்றும் பல்வேறு தரப்பட்ட கல்விப்பிரிவுகளயும் அதற்கான தயார்படுத்தல்கள் பற்றியும்,இந்திய ஆட்சிப்பணி, (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) போன்றவைகள படித்து சாதிப்பதில் எத்தனை எளிதான முறைகள் உள்ளன என்றும், டி.என்.பி.சி., யூ.பி.எஸ்.சி போன்ற போட்டித்தேர்வுகள எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், சட்டம் படித்தவர்கள் வழக்குரைஞர்களாகப்போய்தான் சம்பாதிக்க வேண்டியதில்லை, சட்ட கண்ஸல்டண்டகளாக மிக அதிகளவில் பொருளீட்ட முடியும் நிலையைபற்றியும், அதுவும் உள்நாட்டு சட்டம் பற்றியல்லாமல் சர்வதேச மற்றும் மிடில் ஈஸ்ட் சட்டம் பயிலலாம் என்பது பற்றியும், பயன்தரத்தக்க கருத்துக்கள மிகவும் எளிமையான முறையில் பகிர்ந்து கொண்டார்.

தேநீர் இடைவேளக்கு பின்னர் தொடர்ந்த உரையில், பரங்கிப்பேட்டை மட்டுமல்ல சுற்றுவட்டார 3 மாவட்டங்களுக்கு ஒரே ஒரு பெண்கள் கல்லூரிகூட இல்லை என்ற ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். பெண் கல்விக்கு பாதுகாப்பான சூழல்கள நாம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உணர்த்தினார். (பிற்பாடு கல்விக்குழு தலைவர் பேசுகையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் அவர்கள் பேரூராட்சி மன்றத்தின் தலைவராகவும் இருப்பதால், நமதூரில் பெண்கள் கல்லூரி ஒன்றினை துவங்குமாறு கோரிக்கை வைத்தார்.)

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனூஸ் அவர்கள் தனது தலைமை உரையில் பரங்கிப்பேட்டை கல்வி வளர்ச்சிக்கு ஜமாஅத் பாடுபட்டு வரும் முறைமைகள விவரித்தார். கடந்த காலங்களில் பள்ளி முதல் நிலை பெற்ற மாணவர்களான நூர் முஹம்மது நைனா, ஹபீபா ஜுலைகா போன்றோர் தங்களது கருத்துக்கள மேடையில் பகிர்ந்து கொண்டது இனிமை. இந்த கல்வி மாநாட்டிற்கு நிறைவாக வந்திருந்த கூட்டம், இது பரங்கிப்பேட்டைதானா என்ற மெல்லிய வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்தின் பக்கவாட்டுச்சுவர்களில் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. மிகவும் எளிமையான முறையில் துவங்கி அழகிய முறையில் ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அறிவார்ந்த அடையாளங்களாடு கல்விக்குழு தலைவரின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.

Reade more >>
Wednesday, May 14, 2008 | 0 comments | Labels: