twitter

காங்கிரஸ், பா.ஜ., மற்றும் சமாஜ்வாடி வெளியிட்ட முதல் பட்டியலில், 18 வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள்; சிலர் தண்டனை பெற்றிருப்பவர்கள். கிரிமினல்களை அரசியலில் சேர்க்கக்கூடாது என்று என்னதான் முழங்கினாலும், பல கட்சிகளிலும் இவர்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. போதாக்குறைக்கு, பணபலமும், செல்வாக்கும் உள்ளதால் தேர்தலில் நிறுத்த வேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கு ஏற்படுகிறது.

"நேஷனல் எலக்ஷன் வாட்ச்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இது தொடர்பாக தகவல் களை திரட்டியுள்ளது. கடந்த தேர்தல்களிலும் இந்த அமைப்பு, அரசியலில் கிரிமினல்கள் ஆதிக் கம் பற்றி தகவல்களை ஆராய்ந்து சர்வே அறிக்கையை வெளியிட்டது.லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சிகள் வெளியிட்டதில், 18 பேர் கிரிமினல் நடவடிக்கைக்கு ஆட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில், காங்கிரசை சேர்ந்தவர்களில் நான்கு பேர், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் எட்டு பேர், சமாஜ் வாடியில் ஆறு பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

முலாயம் சிங்கின் சமாஜ்வாடியில் இருந்த நடிகர் ராஜ் பப்பர், இப்போது காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். அதுபோல, பா.ஜ.,வின் ஆனந்த் குமார், ராம்காந்த் யாதவ் மற்றும் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. சித்து மீதான கொலை வழக்கில் அவருக்கு தண்டனை தரப்பட்டு, அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள லோக்சபாவை சேர்ந்த இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த 169 எம்.பி.,க்கள் வெளியிட்ட வாக்குமூலத்தில், தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். உ.பி.,யில் மெய்ன்பூரி தொகுதியில் போட்டியிட உள்ள சமாஜ் வாடி தலைவர் முலாயம் சிங் மீது அளவுக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு உட்பட சில வழக்குகள் விசாரணையில் உள்ளன.

மற்ற மாநிலங்களை விட, உ.பி.,யில் தான் அதிகமாக கிரிமினல் வேட்பாளர்கள் நிற்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

நாளேட்டுச்செய்தி (12-03-09)
Reade more >>
Thursday, March 12, 2009 | 3 comments | Labels:
- தமிழருவி மணியன்

'நா
டு விடுதலை பெற்றதும் காங் கிரஸ் இயக்கத்தின் பணி முடிந்து விட்டது. இனி காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதில் எனக்கு சம்மதம் இல்லை. இந்தியாவிலுள்ள ஏழு லட்சம் கிராமங்களின் நலனை நோக்கி நாம் நடக்க வேண்டும். காங்கிரஸைக் கலைத்துவிட்டு லோக்சேவக் சங்கம் அமைக்கவேண்டும்!'' என்று அறிவித்தார் அண்ணல் காந்தி. அதுதான் அவருடைய கடைசி விருப்பம். சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே காங்கிரஸ்காரர்கள் காந்தியை மறந்தனர். பதவிகளைப் பெறுவதில் அவர்கள் நடத்திய போட்டியும், ஆடம்பர மான வாழ்க்கை சுகங்களை அனுபவிப்பதில் அவர்கள் காட்டிய ஈடுபாடும் காந்தியின் இதயத்தை வருத்தியதால், அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய லூயி ஃபிஷரிடம், 'இந்தியா என்னோடு இல்லை என்பதை நானறிவேன்' (I Know India is not with me) என்றார்.

காந்தியை எதிரியாக பாவித்த கோட்சே, ஒரு நாள் மாலைப் பொழுதில் துப்பாக்கியால் நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்றான். அந்தப் படுகொலை ஒரு கணத்தில் நடந்து முடிந்தது. ஆனால், மகாத்மாவின் சீடர்களால் நேர்மை, எளிமை, தூய்மை, வாய்மை தன்னல மறுப்பு என்னும் காந்தியப் பொதுவாழ்க்கைப் பண்புகள் அனைத்தும் கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லறைக்குப் போய்விட்டன. கோட்சேவை விடவும் கொடியவர்கள், 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்று முழங்கும் புதிய காங்கிரஸ்காரர்கள்.

காந்தியின் தலைமை காங்கிரஸ§க்கு வாய்ப்பதற்கு முன்பே தமிழகத்தில் அந்த விடுதலை இயக்கத்தை வியர்வை சிந்த வளர்த்து, ஒரு ஜென்மத்தில் இரு ஜென்ம தண்டனையை பரிசாகப் பெற்று சிறையில் செக்கிழுத்த வ.உ.சி. ஒரு கட்டத்தில் மனம் நொந்து காங்கிரஸை விட்டு வெளியேறினார். தமிழகத்தில் அந்த இயக்கத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க அயராது உழைத்து, கதர்மூட்டையைத் தோளில் சுமந்து விற்று, மணிக்கணக்கில் மேடைகளில் முழங்கி, மனைவி யுடன் மதுவிலக்கு மறியல் நடத்தி சிறைப் பறவையாகவே வாழ்வை நடத்திய பெரியார், 'காங்கிரஸை ஒழிப்பதுதான் இனி என் ஒரே வேலை' என்று 1925-ல் காஞ்சி மாநாட்டில் சூளுரை செய்து வேதனையுடன் விலகினார். தமிழ்த்தென்றல் திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களும் ஒருவர் பின் ஒருவராக பெரியாரை பின்பற்றி காங்கிரஸைவிட்டு ஒதுங்கினர்.

சுயநலம் சார்ந்த போலி ஒழுக்கவாதிகளிடம் சிக்கிச் சீரழியத் தொடங்கிய காங்கிரஸை, தமிழகத்தில் கண் மூடிவிடாமல் காப்பாற்றிய பெருமை காமராஜருக்கு மட்டுமே உண்டு. அந்தத் தன்னலமற்ற அரசியல் துறவியால் ஈர்க்கப்பட்டவர்களால்தான் காங்கிரஸின் வாக்கு வங்கி சிதையாமல் இருந்தது. காமராஜர் இருந்த வரையில் காங்கிரஸ் என்ற மகாவிருட்சத்தை வேரறுந்து விழுந்துவிடாமல் பல்லாயிரம் விழுதுகள் பாதுகாத்தன. காங்கிரஸை தனியாக எதிர்க்க முடியாமல்... திராவிட இயக்கம் கூட்டணித் துணையோடுதான் தேர்தல் களத்தில் இறங்க முடிந்தது. அந்தப் பெருந்தலைவர் மறைந்த பின்பு, கழகங்களுக்குப் பல்லாக்குத் தூக்குவதையே தன் வாழ்காலக் கடமையாக்கிக்கொண்டது காங்கிரஸ்.

தமிழகத்தில் காங்கிரஸ் தன்னிலை தாழ்ந்ததற்கும், கழகங்களுக்கு குற்றேவல் செய்து பதவி சுகம் அனுபவிப்பதற்கும் முதற் காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி. அவர் காங்கிரஸை வழிநடத்தும் வரை என்னைப் போன்ற காமராஜ் தொண்டர்கள் தாங்கள் வளர்த்த கட்சியை விட்டு விலகி நின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தத் திறமையும், ஆற்றலுமற்ற கூஜாக்களின் கூடாரமாக காங்கிரஸை நீர்த்துப் போகச் செய்தார். கூஜாக்கள் அனைவருமே குள்ளர்கள். எப்போதும் குள்ளர்களின் சாம்ராஜ்ஜியத்தில் உயர மானவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நேரு, காமராஜ் காலத்து காங்கிரஸ், சோனியாகாந்தி காலத்தில் கூட்டணிக் கட்சியாகக் குறுகிப்போனது, இந்தக் குள்ளர் களால்தான்!

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் நாளுக்கு நாள் கரைந்து வருவதற்குரிய காரணங்கள் மிகவும் வெளிப்படையானவை. வாக்காளர்களைத் தங்கள் பக்கம் நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள காந்தி, காமராஜர் போன்ற தன்னலமற்ற துறவிகளாகவோ பெரியார், ஜீவாவைப் போல் சமரசமற்ற சமுதாயப் போராளிகளாகவோ அண்ணா, கலைஞரைப் போல் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க தலைவர் களாகவோ எம்.ஜி.ஆரைப் போன்ற வள்ளல்தன்மையும் மனிதநேயரும் உள்ளவராகவோ இருக்கவேண்டும். தமிழ்நாடு காங்கிரஸில் அப்படி யாரும் இல்லை. இன்றிருப்பவர்கள் எல்லாம் வியர்வை சிந்தாமலே விளைச்சலை எதிர்பார்ப்பவர்கள்; தனிநபர் துதி பாடியே தலைவரானவர்கள்; டெல்லிக்குக் காவடி தூக்குவதே கட்சிப் பணி என்று கருதுபவர்கள்.

திராவிட இயக்கங்களில் ஆயிரம் குறைகள் இருந்தா லும், அந்தக் கட்சிகள் மக்கள் மத்தியிலேயே தொடர்ந்து இயங்கி வருகின்றன. தி.மு.க-வின் வாக்கு வங்கியைக் காப்பாற்ற கலைஞரும், அ.தி.மு.க-வின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவும் இருக் கின்றனர். அவர்கள் இருவரையும் வாக்காளர்கள் நெஞ்சில் நிறுத்தி அந்தக் கட்சியினர் வேட்பாளர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகின்றனர். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்களோ, அவர்கள் பிறந்த ஊரில் தனியாக நின்றாலும் டெபாசிட் இழக்கக் கூடிய அளவுக்குச் 'செல்வாக்கு' பெற்றவர்கள்! இவர்கள் முகத்தைக் காட்டி எந்தத் தொகுதியில் யார்தான் வெற்றிபெற முடியும்? தன்னலமற்ற தியாகமும், நேர்மை யும் எளிமையும் நிறைந்த பொதுவாழ்க்கையும், மக்கள் நலன்நாடும் போர்க்குணம் என்ற எந்த ஒளிவட்டமும் தலைக்குப் பின்னால் இல்லாத தலைவர்களால் காங்கிரஸ் எப்படிக் காப்பாற்றப்படும்?

தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்கள் என்று தாங்களாகவே அடையாளப்படுத்திக்கொண்டு அகம் மகிழும் மனிதர்களுக்குத் தெளிவான பார்வை இல்லை. மக்கள் நலனுக்காகப் போராடும் தார்மிக ஆவேசமும் இயக்கத்தைக் கடைசி கிராமத்து மனிதன் வரை கொண்டு சேர்க்கும் உந்துதலும் இல்லாமல் இரண்டு திராவிடக் கட்சிகளின் தோள்களில் சுகமாக ஏறி அமர்ந்து, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் எம்.பி.,

எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றுத் தரும் ஒரு தரகு நிறுவனமாகத் தன்னிலை தாழ்ந்துவிட்டது தமிழ்நாடு காங்கிரஸ்.

திராவிடக் கட்சிகளின் முப்பதாண்டு வேட்பாளர்கள் பட்டியலை ஆய்ந்து பார்த்தால்... அந்தக் கட்சிகளுக்காக உழைத்த எத்தனையோ புதிய மனிதர்களின் பெயர்களைப் பார்க்க முடியும். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸில் கொடிகட்ட ஒரு கூட்டம், கோஷமிட ஒரு கூட்டம், மேடை போட ஒரு கூட்டம், தேர்தலில் நிற்பதற்காகவே ஒரு கூட்டம் என்றிருக்கும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பத்து இடங்களில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தால் சிதம்பரம், இளங்கோவன், மணிசங்கர் அய்யர், சுதர்சனம் நாச்சியப்பன், வன்னியர்களுக்காக இடம் ஒதுக்கவேண்டி இருந்தால் கிருஷ்ணசாமி என்று ஏழு பேர் பட்டியலில் நிச்சயம் இருப்பார்கள். மீதமுள்ள மூன்று இடங்கள்கூட பலமுறை பதவி வகித்து நாற்காலி தேய்த்தவர்களைத்தான் சென்று சேரும்.

'இவ்வளவு குறைகளும் உள்ள கட்சியில் இத்தனை காலம் நீ ஏன் இருந்தாய்? இப்போதுதானே விலகி வந்தார்?' என்ற கேள்வி நியாயமானது. லண்டன் மாநகரின் சீரழிவு களைப் பட்டியலிட்ட ஆங்கிலக்கவிஞன் பைரன், 'With all thy Faults, I Still Love thee' என்று முடிப்பான். இவ்வளவு களங்கமிருந்தும், 'உன்னை நான் இன்னமும் காதலிக்கவே செய்கிறேன்' என்ற பைரனின் நிலையில்தான் நான் இருக் கிறேன். காங்கிரஸ் ஓர் ஆத்ம சோதனையில் ஈடுபட, அது மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கவேண்டும். ஆனால், எந்தச் சூழலிலும் அந்த இயக்கம் அழிந்து விடக்கூடாது என்று இன்றும் நான் பிரார்த்திக்கிறேன். இந்திய ஒருமைப்பாடும் மதச்சார்ப்பற்ற தன்மையும் இறுதிவரை காக்கப்பட, காங்கிரஸ் இருந்தாகவேண்டும் என்பது என் மாறாத நம்பிக்கை. சோனியா காந்தி யும், தங்கபாலுவும் காலாகாலமும் காங்கிரஸ் தலைமை பீடத்தில் இருக்கப் போவதில்லை. 'பறவைகள் வரலாம் போகலாம்; மகாவிருஷம் சாய்ந்து விடக் கூடாது' என்ற கவியரசர் கண்ணதாசனின் ஆசைதான் என் ஆசையும். தமிழின அழிப்பு என்பது காங்கிரஸின் கொள்கை இல்லை. அது சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடக்கும் மத்திய அரசின் கொள்கை என்ற தெளிவு எனக்கு இப்போது உண்டு.

அரசியல் கட்சிகளின் நம்பகத் தன்மை அவற்றுக்குத் தலைமையேற்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது. இன்றுள்ள நிலையில் எந்தக் கட்சியின் மீதும் எனக்கு நம்பிக்கை எழவில்லை. வாழ்வின் மிக முக்கியமான நாற்பதாண்டுகளை அர்த்தமற்று அரசியல் அரங்கில் வீணாக்கிவிட்ட கழிவிரக்கம் இதயம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இனி என் வாழ்வின் இறுதித் தருணம் வரை அரசியல் அரங்குக்கு அப்பால் நின்று சமூகநலன் சார்ந்து என் பேனாவின், பேச்சின் மூலமும் முனைப்பாகப் போராடுவேன். பணம் குவிக்கும் நோக்கமும் அதிகாரப் பதவியில் அடங்காத வேட்கையும் இல்லாமல் பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கும் அரசியல் சாராத மனித உரிமை அமைப்புகளுக்கும் வன்முறையற்ற அறவழியில் ஒரு நிறம் மாறாத நிஜமான காந்தியவாதியாகத் துணைநிற்பேன்.

நிற்க, முதல்வர் கலைஞரிடம் ஜூ.வி. கட்டுரையின் மூலம் கொஞ்சம் பேச விழைகிறேன். ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஒழிப்பு என்ற போர்வையில் நம் இனம் முற்றாக அழிக்கப்பட்டு வரும் நிலையில்... சிங்கள---பௌத்த பேரினவாத பாசிச அரசுக்குப் பக்கபலமாக நிற்கும் மத்திய அரசின் அணுகுமுறையை மான உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் அங்கீகரிக்க முடியாது. சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படியே மன்மோகன் சிங் அரசு நடந்துவருகிறது என்று காங்கிரஸை சார்ந்த மத்திய அமைச்சர்கள் வாய்மொழிவதை நீங்களும் அடிக்கடி வழி மொழிகிறீர்கள். அப்படியானால், சோனியாகாந்தியின் வழிகாட்டுதலில்தான், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படும் அவல நிலையை பாசிச வெறிபிடித்த ராஜபக்ஷே அரசு அரங்கேற்றுவதற்கு மறைமுகமாக நம் மத்திய அரசு உதவி வருகிறதா? ஈழத் தமிழர் இன்னல் குறித்து, இழப்பதற்கு எதுவுமற்றும், தப்புவதற்கு வழியுமற்றும் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடக்கும் நம் தொப்புள்கொடி உறவு குறித்து, மனித உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து இன்று வரை வாய் திறக்காத சோனியாகாந்தியின் கூட்டணி உங்களுக்குத் தேவையா?

'நான் இருக்கிறேன் உங்கள் கவலை தீர்க்க!' என்று எத்தனை பேர் சொன்னாலும், 'கலைஞரே! நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?' என்றுதான் ஈழத்தமிழரின் கண்கள் ஏக்கத்துடன் அலைபாய்கின்றன. அரசியல் நிர்ப்பந்தங்களால் உங்கள் போர்க்குணம் அழிந்துவிடக் கூடாது. உங்கள் தீந்தமிழ்ப் பேச்சும், எழுத்தும் தமிழினம் காக்கும் பாதுகாப்பு கவசங்கள் என்று நம்பும் உலகத் தமிழரின் நம்பிக்கை, எந்த நிலையிலும் நலிந்துவிடக் கூடாது. ஆட்சி நாற் காலிக்காக தமிழரின் நலனை நீங்கள் கைவிட்டதாக ஒரு களங்கம் உங்கள் வாழ்க்கை வரலாற்றின் எந்தப் பக்கத்திலும் இடம் பெறலாகாது.

இனவுணர்வற்ற காங்கிரஸ் கூட்டணியைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் தன்னிலை தாழ வேண்டிய தில்லை. காங்கிரஸ§டன் கைகோத்து நிற்கும் யாரும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிக மோசமான படிப்பினை பெறுவார்கள். பக்தவத்சலம் பரிவாரம், 'தி.மு.க-வின் தூண்டுதலால் மாணவர் போர்வையில் சில காலிகள் செய்யும் கலவரம்!' என்று இந்தி எதிர்ப்பை ஏளனமாக விமர்சித்தது. மக்களின் மனவுணர்வின் கொதிநிலையை உணராததன் விளைவு, 1967-ல் கோட்டையிலிருந்து வெளித்தள்ளப்பட்ட காங்கிரஸ், கடந்த நாற்பதாண்டுகளாக நட்டநடு வீதியில் நின்றுகொண்டிருக்கிறது.

அன்று நடந்தது மொழிப் போராட்டம். இன்று இனப் போராட்டம்! இதில் முன்னால் நின்று முகம் காட்டவேண்டிய நீங்கள், பின்னால் திரும்பி முதுகு காட்டலாமா? உங்கள் பொதுவாழ்வில் நேர்ந்திருக்கும் மிகப்பெரிய அரசியல் பிழை இது. ஆயிரம் முறை அரசியல் சதுரங்கத்தில் சாணக்கிய சாமர்த்தியத்துடன் காய்களை நகர்த்திய நீங்கள், இன்று ஏன் தவறாக வியூகம் அமைத்துத் தடுமாறுகிறீர்கள்? கலைஞர் அவர்களே, பல சந்திப்புகளில் என்னிடம் நீங்கள் பொழிந்த தூய அன்பில் மழை விழுந்த செம்மண் நிலமாக மனம் நெகிழ்ந்தவன் நான். சொல்லொணாத் துயரங்களில் ஈழத்தமிழர் இன்னலுறும்போது, குருடன் கூத்துப் பார்த்த கதையாக நடந்துகொள்ளும் சோனியாகாந்தி காங்கிரஸ§க்கு எதிராக, தமிழகம் கொதிநிலையில் இருப்பதை அறிந்து, அந்தக் கூட்டணியை உடனே கைகழுவுங்கள். அடுத்த கணம் மானமற்ற காங்கிரஸ், போயஸ் தோட்டத்தில் போய் நிற்கும். இடதுசாரிகள் அங்கிருந்து உங்களை நோக்கி இடம்பெயர்வார்கள். உங்கள் தலைமையில் பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் தமிழினவுணர்வுள்ள அமைப்புகள் அணிவகுக்கும். நாற்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி காணாமற்போகும். இடையில் உங்கள் அரசு கவிழலாம். 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் இனமாக இருக்கட்டும்!' என்று அடிக்கடி சொன்னவர் நீங்கள்தானே! முதல்வர் மகுடம் ஒரு முறை பறிபோனால்... மீண்டும் வரும். தமிழினத் தலைவர் என்ற தகுதி பறிபோனால்... வாழ்வில் மீண்டும் வராது. உங்கள் அன்புக்கினிய கவிஞர் அப்துல் ரகுமான் சொல்கிறார்,

'மகுடங்கள் இடம் மாறக் கூடியவை. உன் தலை மகுடத்தால் அலங்கரிக்கப்படுவதை விட, புகழால் அலங்கரிக்கப்படட்டும்!'

நன்றி: ஜூனியர் விகடன்

Reade more >>
Thursday, March 5, 2009 | 2 comments |