twitter


சுழன்றடித்த சுனாமிக்குப் பிறகு தமிழக தட்பவெப்ப நிலையில் நிறைய மாற்றங்கள். கோடையில் அதீத அனல், குளிர்காலத்தில் மழையும் குளிரும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலை. இதன் தாக்கம் கடலிலும் எதிரொலிப்பதால் குமரி முதல் சென்னை வரை வரை பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி, ஆர்ப்பரிக்கின்றன. கடலை நம்பியே வாழும் மீனவர்கள், தமிழக மக்களின் மனதில் பயம்; பீதி. என்னவாயிற்று இயற்கைக்கு?``


காற்று மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு மூல காரணம். சுருக்கமாக `குளோபல் வார்மிங்'. இதனால் கடல் மட்டம் உயர்ந்து நீர் நிலத்திற்குள் வரும். குறிப்பா சென்னை நகரத்திற்கு இந்த ஆபத்து அதிகம்!'' என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல புவியியல் நிபுணரும், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான டாக்டர் ராமச்சந்திரன்.


``உலகின் தென்துருவமான அண்டார்ட்டிகா முழுவதும் பனிமலைகளின் ஆதிக்கம். மனிதர்கள் உயிர்வாழ முடியாத அளவு ரத்தத்தை உறைய வைக்கும் வெப்ப நிலை. ஆனால் கடந்த பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிற பனிக்கட்டிகள் மெல்லமெல்ல உருக ஆரம்பிச்சிருக்கு. இதற்குக் காரணம் அங்கே 0.5 முதல் 1% வரை வெப்பநிலை உயர்ந்திருப்பதுதான். இதனால் கடல் நீர்மட்டம் 28 செ.மீ. உயரம் என்கிற அசாதாரண நிலையைத் தொட்டிருக்கு.


1980-க்குப் பிறகு ஆராய்ச்சிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கு'' என்று சொல்லும் ராமச்சந்திரன், ``இப்போதிருக்கும் உலக வெப்ப நிலையில் 2% உயர்ந்தாலே போதும், ஆபத்து நிச்சயம்'' என்கிறார்.


ஏற்ற இறக்கமான தட்பவெப்ப நிலைக்கு மற்றொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது `எல் நினோ'. தென்அமெரிக்க நாடான `பெரு'வில் பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தில் உண்டாகும் மாற்றம்தான் `எல் நினோ'. உலகின் மேற்குப் பகுதியில் உயரமாக இருக்கும் இந்த நீரோட்டம், கிழக்குப் பக்கம் சற்று தாழ்வாக இருக்கும். அதன் காரணமாக கடல்நீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டத்தை உயர்த்துகிறது.சரி, பனிப்பாறைகள் உருகுவது இயல்புதானே. இயற்கை அதனை சமன் செய்து கொள்ளாதா?


``அப்படிச் சொல்ல முடியாது. உதாரணமா லார்சன் - ஏ. இவை அண்டார்ட்டிகாவில் இருக்கும் மிகப்பெரிய பனிப்பாறைகள். நான்காயிரம் ஆண்டுகள் பழமையானவை. பொதுவா மிக அதிக வெப்பம் தாக்கினாலன்றி பனிப்பாறைகள் எளிதில் உருகாது. ஆனால் தற்போது லார்சன்-ஏ பனிப்பாறைகள் உருகிக்கிட்டிருக்கு. இதனால் நீரின் அடர்த்தி, வெப்ப நிலை, காற்றின் வேகம்... உள்ளிட்டவற்றில் நிறைய மாற்றங்கள். இயற்கையின் போக்கையே இந்த மாற்றங்கள் புரட்டிப் போட்டுவிடும்'' என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார் ராமச்சந்திரன்.


`பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்தாலும், தமிழகத்திற்கு ஆபத்து உண்டா?' - என்ன சொல்கிறார் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராய்டு?


``இப்போ நாம மக்கிப் போன பொருட்களிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல், அனல் மின்சாரத்தைத்தான் எரிபொருட்களா பயன்படுத்துறோம். இதனால் காற்று மண்டலம் முழுவதும் கார்பன்_டை_ஆக்ஸைடின் அளவு எகிறுது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடல் பகுதியின் பரப்பளவு மிக நீ... ளம்.


குறிப்பா, கடலின் ஆழ்பகுதிக்கும் தரைப்பகுதிக்கும் இடையே உள்ள `மீன் ஸீ லெவல்' (எம்.எஸ்.எல்.) சென்னையில் மிகவும் குறைவு. உதாரணமா, ஊட்டியில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு மூவாயிரம் அடி. ஆனால் சென்னையில் `எம்.எஸ்.எல்.'லின் அளவு என்ன தெரியுமா? ஒரு அடிக்கும் குறைவு. சென்னையில் ராயபுரம் முதல் திருவான்மியூர் வரை இதுதான் நிலை. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர்மட்டம் உயரும் போது சென்னைக்கு பாதிப்பு நிச்சயம்!' எனச் சொல்லும் ராய்டு, மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவதும், கடல்வாழ் தாவரங்களை வளர்ப்பதும் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று `பாசிட்டிவ்'வாகப் பதில் சொல்கிறார்..


``லேட்டஸ்ட்டாக இமய மலையை ஆய்வு செய்து வரும் டெல்லியைச் சேர்ந்த புவி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று `குளோபல் வார்மிங்' காரணமாக இமயமலையில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், இன்னும் 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் முழுவதும் உருகி வெறும் கற்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதனால் இந்தியப் பெருங்கடலில் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடலில் மூழ்கும் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
Sunday, November 9, 2008 | 3 comments | Labels:

3 comments:

  1. வடுவூர் குமார்
    November 9, 2008 at 5:16 AM

    ஹூம்! நம்மால் ஆனதை செய்வோம்.

  1. வாசகன்
    November 9, 2008 at 6:58 AM

    வாங்க சார்,
    நெம்ப நாளைக்கப்புறம் வந்திர்க்கீங்க.
    நெறய எயுதுங்க வாத்யாரே.

    ஆமா, இத்த எங்கனயோ பட்ச்சேனே..

  1. வினோத் கெளதம்
    April 20, 2009 at 4:04 AM

    Bayamaa thaan irukku..