நேற்று இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு ஒருவழியாக இரவு பத்து மணிக்கு காரில் கிளம்பினேன். கொஞ்ச நேரத்திலேயே காரின் உள்ளே மஞ்சள் விளக்கு பல்லிளித்தது. அடக்கடவுளே பெட்ரோல் தீர்ந்து விட்டது.
பரவாயில்லை. குரோம்பேட்டையிலிருந்து வேளச்சேரி செல்வதற்குள் குறைந்தபட்சம் பத்து பெட்ரோல் பங்க் கள் இருக்கின்றன எங்காவது ஒரு இடத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே காரை ஓட்டினேன்.
குரோம்பேட்டை பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க் வாசலில் ஒரு பெரிய ட்ரம் கயிறுகளுடன் கட்டப்பட்டிருந்தது. “ஸ்டாக் தீந்து போச்சு சார்” பதில் வந்தது.
அடுத்த இடத்தில் விளக்கையும் அணைத்து விட்டிருந்தார்கள்.
இதே நிலை தான் வேளச்சேரி வரை. எல்லா பெட்ரோல் பங்க்களும் இரவு பத்து மணிக்கே மூடப்பட்டு, வழி அடைக்கப்பட்டு இருட்டுக்குள் கிடந்தன.
காரணம் நள்ளிரவுக்கு மேல் விலையை ஐந்து ரூபாய் ஏற்றிக் கொள்ளலாம் எனும் அறிவிப்பு.
நண்பனுக்கு தொலைபேசினேன், மவுண்ட் ரோடு பக்கம் ஏதாவது பெட்ரோல் பங்க் திறந்திருந்ததா என அறிந்து கொள்ள. “எல்லாம் சாயங்காலமே மூட ஆரம்பிச்சுட்டாங்க” என்றான் அவன்.
எரிச்சலும், கோபமும், வழியில் வண்டி நின்று விடக் கூடாதே எனும் பயமுமாக வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் – என்று ஏன் பெட்ரோல் விலை உயர்வு வருகிறது என்பது புரியவே இல்லை. அதனால் ஏற்படும் அவஸ்தைகளுக்கு அளவே இல்லை.
மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாகனம் நின்றிருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.
11.59 வரை ஸ்டாக் இல்லாத பெட்ரோல் பங்க் கள் 12.00 மணிக்கு எப்படி சட்டென திறந்து கொள்கின்றன ? ஸ்டாக் எங்கிருந்து வருகிறது என்பதெல்லாம் பூச்சாண்டிக் கதைகள் என்பதை மழலைகளே விளக்கும்.
விலையை உயர்த்தி சட்டமியற்றும் அரசு, நள்ளிரவு நேரம் வரை கடைகளை மூடக்கூடாது என்று சட்டம் இயற்ற முடியாதா ? அல்லது தேவையில்லாமல் இரண்டு மூன்று மணி நேரம் ஒட்டு மொத்தக் கடைகளையும் அடைத்து சமூகத் தேவையை மதிக்காத இந்த பங்க்களை என்ன செய்வது ?
இந்த சில மணி நேர லாபத்துக்கே இப்படிச் செய்பவர்களை நினைக்கும்போது ஒன்று சட்டென மனதில் தோன்றியது. தனியார் மயம் எத்தனை கொடுமையானது ? வெறும் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இவர்களிடம் ஒரு உதாரணத்துக்காக போக்குவரத்தை ஒப்படைப்பதாய் வைத்துக் கொண்டால், நெரிசல் நேரங்களில் மட்டுமே பஸ் ஓடும். காலையில், இரவில், மதிய நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்தால் பஸ் ஓடாது இல்லையா ?
செய்தித் தாளில் திருத்தப்பட்ட பெட்ரோல் விலை என்று ஒரு விலை போட்டிருந்தார்கள். காலையில் பெட்ரோல் நிரப்பியபோது வேறோர் விலையில் இருந்தது.
அதிலும் ஸ்பீட், பவர், சக்திமான் என்றெல்லாம் பெயரிட்டழைக்கும் பெட்ரோல் லிட்டர் 60 ரூபாயையும் தாண்டி !!! இதுக்கெல்லாம் என்ன நிர்ணயம் என்பது விளங்கவில்லை. 52 ரூபாய்க்கு விற்ற பவர் பெட்ரோல் 60 ரூபாய் எனில் 8 ரூபாய் விலையேற்றம். அது அனுமதிக்கப்பட்டது தானா ? அதுக்கு 5 ரூபாய் விலையேற்றம் பொருந்தாதா ? என்பதெல்லாம் ஒரு சாமான்யனின் விடை தெரியாத கேள்விகள்.